Monday, December 23, 2024

குடும்பம் சுபிட்சமாக இருக்க வழிபாடு

நம்முடைய   கர்ம   வினைகளின் அடிப்படையிலேயே நம்முடைய வாழ்க்கை என்பது தீர்மானிக்கப்படுகிறது. நம்முடைய கர்ம வினைகள் மட்டுமல்லாமல் நம்முடைய முன்னோர்கள் செய்த கர்ம வினைகளின் அடிப்படையிலும் நம்முடைய வாழ்க்கை அமையும் என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன.  அப்படி   நம்முடைய முன்னோர்கள் செய்த கர்ம வினைகளால் ஏற்பட்ட சாபங்களும், குற்றங்களும் நீங்க வேண்டும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அகல வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த தீப வழிபாட்டை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

எப்படி நம்முடைய முன்னோர்களின் சொத்துக்களை நாம் எந்தவித தயக்கமும் இன்றி அனுபவித்து மகிழ்கிறோமோ? அதே போல் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவகர்ம வினைகளுக்குரிய பலன்களையும் நாம் அனுபவித்தே தீர வேண்டும். எந்தவித பாவங்களையும் செய்யாமல் இருந்தாலும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு அவர்களின் மூதாதையர்கள் செய்த கர்ம வினைகளாலும் கஷ்டப்படுவார்கள் என்பதை உணர வேண்டும். அப்படி முன்னோர்கள் செய்த கர்ம வினைகளாலும் தாங்கள் செய்த கர்ம வினைகளாலும் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நீங்க செய்யக்கூடிய எளிய வழிபாட்டு முறை.

இந்த வழிபாட்டை வீட்டில் தான் செய்ய வேண்டும். உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாள் அன்று மாலை 6 மணிக்கு புதிதாக ஒரு  பேரிய அகல் விளக்கை வாங்கி வந்து சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அகல் விளக்கை வைப்பதற்கு ஒரு சிறிய தாம்பாள தட்டையும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கில் உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று வேப்ப எண்ணையை ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும்.     

பிறகு தீபத்தை குளிர வைத்து விடலாம். மறுநாள் இதே விளக்கில் ஏற்கனவே இருக்கும் வேப்ப எண்ணையுடன் சேர்த்து இலுப்ப எண்ணையை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதையும் ஒரு மணி நேரம் கழித்து அப்படியே குளிர வைத்து விட வேண்டும். மூன்றாவது நாள் இந்த அகல் விளக்கில் விளக்கு எண்ணெய் அதாவது ஆமணக்கு எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். நான்காவது நாள் இந்த அகல் விளக்கில் நெய்யை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். ஐந்தாவது நாள் இதே அகல் விளக்கில் தேங்காய் எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

ஆறாவது நாள் அந்த அகல் விளக்கில் ஐந்து எண்ணெய்களையும் சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். அதாவது வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இவை அனைத்தையும் சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது ஒரு தாம்பாள தட்டை எடுத்துக்கொண்டு அதில் தங்களால் இயன்ற அளவு சர்க்கரை பொங்கலை வீட்டிலேயே செய்து படையலாக வைத்து ஆதனுடன் சிறிது அருகம்புல் வைக்க வேண்டும். 

பிறகு அதில் இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது என்று தங்களுடைய வசதிக்கேற்றார் போல் வாழைப்பழத்தை வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இப்படி நெய்வேத்தியம் செய்த இந்த சர்க்கரை பொங்கலை அப்படியே எடுத்துக் கொண்டு போய் அருகில் இருக்கும் பசுமாட்டிற்கு தானமாக வழங்கிவிட்டு பசுமாட்டை தங்களால் இயன்ற அளவு 3, 5, 7, 9 என்ற எண்ணிக்கையில் வலம் வந்து வணங்க வேண்டும்.

இப்படி வணங்குவதன் மூலம் நம்முடைய முன்னோர்கள் செய்த கர்ம வினைகளும் அதனால் ஏற்பட்ட குற்றங்களும், சாபங்களும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் இதுவரை நாம் செய்த கர்ம வினைகளும் அதன் பலன்களும் நீங்கி நம் குடும்பத்தில் சுபிட்சமான ஒரு நிலை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சகல விதமான நன்மைகளும் உண்டாகும். 

மாதாமாதம்    வரக்கூடிய  இந்த உத்திரட்டாதி   நட்சத்திரத்தை   குறித்து வைத்துக்கொண்டு இப்படி நாம் தீபம் ஏற்றி வழிபட நம் வாழ்வில் இருக்கக்கூடிய கர்ம வினைகள் நம்மையும் தொடராமல் நம்முடைய பிற்கால   சந்ததியையும்  தொடராமல் நிம்மதியான  நலமான   சுபிட்சமான வாழ்க்கையை வாழ முடியும்.

Latest article