குடியிருப்பு பகுதியில் உருவான குப்பை கிடங்கால் பொதுமக்கள் அவதி…

0
180
         பெரும்பாக்கம்    மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் தற்போது    அதிக  அளவில் குடியிருப்புகள்  பெருகி  மக்கள் தொகை   அதிகரித்து  உள்ளது. இதே போல் வாகன போக்குவரத்தும் பல   மடங்கு   உயர்ந்து விட்டது. இந்த     நிலையில்    பெரும் பாக்கம் ஊராட்சியின்   பின்  பகுதியில் ஜல்லடியான்  பேட்டை  பிரதான சாலையில் உள்ள காலி இடம் குப்பைகளை சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டு   உள்ளது.  இங்கு சேகரிக்கப்   படும்  குப்பைகள் பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம்  ஓரகடம்  அருகே  உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு     வருகின்றன. சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நிலையில் குப்பை சேகரிக்கும் இடம் தற்போது குப்பை கிடங்காக மாறி விட்டது. இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாமல்      அங்கேயே குவிந்து கிடப்பதால் தெருநாய்கள் மற்றும் மாடுகள் அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றி வருகின்றன.
	நாய்கள் கழிவுகளை இழுத்து சாலையோரம் போட்டு செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். கடும் துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
	இங்கு  கொட்டப்படும்  குப்பைகளை  உடனுக்குடன் அகற்றி கிடங்கிற்கு மாற்ற ஊராட்சி நிர்வாகம் கடும் சிரமம் அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, முறையாக பராமரிக்கப்படாத குப்பை கொட்டும் நிலையத்துக்குள் தெருநாய்கள், கால்நடைகள் அதிக அளவில் சுற்றி வருவதால் பெரும்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான நாட்களில், சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் பாதி மட்டுமே குப்பை கிடங்கிற்கு மாற்றப்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.