Tuesday, December 24, 2024

கிண்டி ரயில் நிலையத்தில் சீரமைக்கப்படாத நடை மேடை…

கிண்டி ரயில் நிலையத்தில் உடைந்துள்ள புதிய நடைமேடை பகுதியை தாமதமின்றி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கிண்டி ரயில் நிலையத்தில் பயணியர் தரை வழியாக ரயிலில் ஏறி பயணிப்பதற்கு ஏதுவாக, மேற்கு பக்கம், புதிய நடை மேடை அமைக்கப்பட்டு, 6 மாதங்களாக பயணியர் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து, கடற்கரை செல்லும் மின்சார ரயிலில், இந்த புதிய நடைமேடை வழியாக அதிகமானோர் ரயிலில் பயணிக்கின்றனர். புதிய நடை மேடையில் தண்டவாளத்தையொட்டி பயணியர் நடக்க ஏதுவாக பதிக்கப்பட்ட மூன்று கான்கிரீட் கற்களின் பிடிமானத்திற்காக பூசப்பட்ட சிமென்ட் மழையில் உதிர்ந்துள்ளது.

இதனால், இக்கற்கள் ஏற்றம் இறக்கமாக உள்ளன. இந்த கற்களின் ஒரு பகுதி இணைத்திருக்கும் பகுதியில், 4 இன்ச் உயரத்துக்கு கற்கள் கீழே அழுந்தி உள்ளன. அவசரத்தில் ரயிலில் செல்வதற்கு ஓடிவரும் பயணியர், நடை மேடையில் சேதமடைந்துள்ள இடத்தில், தவறி கால் வைத்தால் தடுக்கி விழும் அபாயம் உள்ளது.

இந்நிலை தவிர்க்கப்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, நடைமேடையை தாமதமின்றி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Latest article