Monday, December 23, 2024

கார்த்திகை மாத சிறப்புகள்

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். கார்த்திகை மாத முதல் நாளில் முடவன் முழுக்கு என்று குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நாளில் காவேரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும் என்பது ஐதீகம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கார்த்திகை மாத சிறப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.கார்த்திகை பவுர்ணமி விரதம் கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது. கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும். கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

கார்த்திகை விரதம்
கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும்.
நவகிரக தோஷங்கள் நீங்கும்
கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமபயம் நீங்கும். நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்
ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.
சோமவார விரதம்
கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும். கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்
குழந்தை பாக்கியம்
முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். ஐவகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முரகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.
Previous articleமுட்டை கீமா
Next article

Latest article