Monday, December 23, 2024

கருட பஞ்சமி விரதம்

பெருமாளின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உரிய விரதம் தான் கருட பஞ்சமி விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

கருடபஞ்சமி தொடர்பாக கூறப்படும் கதை:-

முன்னொரு காலத்தில் 7 அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வந்தனர். ஒருநாள் தங்கை ஆனவள் தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒன்று நாகத்தைக் கவ்விக்கொண்டு சென்றது. அப்போது அந்த நாகம் கக்கிய விஷம் தங்கை கொண்டு சென்ற கஞ்சியில் விழுந்துவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அந்த கஞ்சியை பரிமாறினாள். அதை உண்ட அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.

“தினமும் செய்வது போலத்தானே செய்தோம். இன்று இப்படி ஆகிவிட்டதே... என்று அழுது புரண்ட அவள், தன் அண்ணன்களை காப்பாற்ற வேண்டி இறைவனிடம் மன்றாடினாள். சிவனும், பார்வதியும் அங்கே தோன்றி அவள் அழுகைக்கான காரணத்தை கேட்டனர்.... அவள் நடந்ததைக் கூறினாள். அதற்கு அவர்கள், “ இன்று கருடபஞ்சமி. நீ அதை மறந்து, அதற்குரிய பூஜை செய்யாமல் வந்துவிட்டாய். அது தான் உன் பிரச்சினைக்கு காரணம்.

இங்கேயே இப்போதே நாங்கள் சொல்வதை போல் நாகருக்கு பூஜை செய். குங்கணக்கயிற்றில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண்எடுத்து, அட்சதை சேர்த்து, இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்து. அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்" என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை அவளுக்கு உணர்த்தினர். அவளும் அதேபோல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். இதை பிரதிபலிக்கும் வகையில் கருடபஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இன்றும் கூட, கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப்பெற்றுக்கொள்வதை சில இடங்களில் காணலாம்.

விரதமுறை:-

வளர்பிறை பஞ்சமியில் கருடனுக்குரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும். நடுவில் ஒரு பலகை போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை விரித்துப் பச்சரிசியைக் கொட்டி வைத்து, அதன் மேல் சக்திக்கு தகுந்தபடி பொன், வெள்ளி, தாமிரம், அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் வடிவம் ஒன்றைச் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும்.

பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பருத்தி நூலால் ஆன மஞ்சள் சரட்டை சார்த்தவும்.

இப்படிப் பூஜை செய்பவர்களின் கோரிக்கைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறும். சுகல விதமான செல்வங்களையும் பெறுவார்கள். அதோடு முக்தியும் அடைவர். இந்த பூஜை செய்வதனால் நாக தோஷம் நீங்கும்.

Latest article