பொறியியல் படிப்பில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜூன் 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும்.
இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இவை ஒற்றைச்சாளர முறையில் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், 2024-2025-ம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 6-ந்தேதி தொடங்கியது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஒரு மாத காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த அவகாசம் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெற்றது.
ஓட்டுமொத்தமாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் இணைய வழியில் விண்ணப்பத்தைப்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 180 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் தெரிவித்தார்.
இணையவழி விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே வெளியிட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 கால அட்டவணையின் படி, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ந்தேதி ஆகும். இதைத்தொடர்ந்து ஜூன் 12-ந்தேதி ரேண்டம் நம்பர் எனப்படும் வாய்ப்பு எண் மாணவர்களுக்கு இணைய வழியில் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு ஜூன் 13 முதல் 30-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு இணைய வழியிலேயே நடைபெறும்.
ஜூஐல 10-ந்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து விருப்பமான கல்லூரி மற்றும் பாட பிரிவைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்படும்.