Tuesday, December 3, 2024

இளம் சாதைனையாளர் விருது

இந்த வாரம் நமது எக்ஸ்பிரஸ் வேளச்சேரி வழங்கிய இளம் சாதனையாளர் விருதைப் பெற்றவர் து.திவ்யதர்ஷினி என்கிற பதினைந்து வயது சிறுமி. அவர் நம் வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர்.
இவர் தற்போது சான் அகடமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்து கல்வியில் மட்டுமின்றி கலைகளிலும், விளையாட்டுகளிலும் இயற்கையாகவே மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் தன் பள்ளியில் மட்டுமின்றி பிற அமைப்புகளால் நடத்தப்பட்ட பல வித போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கு பெற்று பல பரிசு கோப்பைகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வென்றுள்ளார்.


இவர் கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற ‘நம்ம ஊரு புத்தகக் கண்காட்சியில்” நடந்த ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். சரஸ்வதி ஹிந்தி வித்யாலயா நடத்திய மலர் அலங்கார போட்டியில் முதல் பரிசும், வாழ்த்து மடல் செய்யும் போட்டியில் இரண்டாம் பரிசும், கையெழுத்துப் போட்டியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதல் பரிசும் பெற்றுள்ளார். சின்மயா மிஷன் நடத்திய பகவத்கீதை ஒப்பிக்கும் போட்டியில் நகர் அளவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.


தனது ஏழு வயது முதல் உடலும் மனமும் இணைந்து செயலாற்ற, பாவனைகளோடு வெளிப்படும் நமது பாரம்பரிய நடனக்கலை பரதத்தை வழுவூர் நாட்டிய குருகுலத்தின்; குரு திருமதி. ஸ்ரீதேவி செந்திலிடம் நாட்டியம் பயின்று வருகிறார். தனது 9வது வயதில் பரதத்தின் முதல் படிநிலையான சலங்கை பூஜையை வேளச்சேரி A2B பார்ட்டி ஹாலில் நிகழ்த்தினார். அதை தொடர்ந்து கடந்த மே மாதம் 4ஆம் தேதி தனது முதல் அரங்கேற்றத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேற்றினார். அதற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.வாகை சந்திர சேகர் (இயல், இசை, நாடக மன்றத் தலைவர்), பாரதிய வித்யா பவன் டைரக்டர் கே.என்.ராமசாமி, திரு.நல்லி குப்புசாமி ஆகியோரின் முன்னிலையில் முருகன் பாடலுக்கு சிறப்புற நடனமாடி அங்கு வந்த விருந்தினர்களின் பாரட்டையும், வாழ்த்தையும் பெற்றார்.

நமது தமிழகத்தில் கலைகள் செழித்து தழைத்தோங்கும் திருவாரூர், தஞ்சாவூர், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, கருர் ஆகிய இடங்களில் சிவராத்திரி விழாக் -களிலும் பல நாட்டியாஞ்சலிகளிலும் பங்கேற்றுள்ளார். நவராத்திரிகளின் போது மயிலாப்பூர் அப்பர்சுவாமி கோவில், சாய்பாபா கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் வேந்தர் டி.வி.யில் ஒளிப்பரப்பிய ‘குறள் பரதம்” என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அவர்கள் பள்ளியின் மூலம் பல பள்ளிகள் பங்கு கொண்ட Initiative for moral and cultural training foundation (IMCTF) நடத்திய கிளாசிக்கல் நடனப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.


பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு திறமைகளைக் கொண்ட இந்த சிறுமி மென்மேலும் புகழ் பெற்று திகழ்ந்திட எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இவரைப் போன்ற இளம் சாதனையாளர்களை ஊக்குவித்து உலகறியச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். உங்கள் வீட்டிலும் இதே போல் குறைந்த பட்சம் 10 பரிசுகளைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளை பற்றிய தகவல்களை ஆதாரங்களோடு எங்களுக்கு தெரிவிக்க வேண்டிய புலனம் எண் 7305837388. . வேளச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து நகரங்களைச் சேர்ந்தவர்களும் இதன் மூலம் பயன் அடையலாம்.

Latest article