அரசு பள்ளிகளில் மார்ச் 1-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை…

0
115
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ந்தேதி முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி அதில் உள்ள?ர் பிரமுகர்களை பங்கு பெறச்செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமைகள் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும்.

அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது உடையவர்களை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். வீடு தோறும் நேரடியாக சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருகிற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டும்.