அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது வேளச்சேரி – தரமணி ரயில்வே சாலை…

0
190

நிர்வாக குளறுபடி, பருவமழை, கொரோனா போன்ற காரணத்தால், மூன்று ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட, வேளச்சேரி – தரமணி ரயில்வே சாலை பணி, இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த மாதம், இந்த சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வேளச்சேரி – தரமணி ரயில் நிலையம் இடையே, ரயில் தண்டவாளம் அருகில், 3.5 கி.மீ., தூரத்தில், 80 அடி அகல உள்வட்ட சாலை அமைக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சாலை வழியாக வேளச்சேரி, பெருங்குடி, தரமணி சுற்றவட்டார மக்கள், ரயில் நிலையங்கள் மற்றும் ஓ.எம்.ஆர் சாலையை எளிதில் சென்றடைய முடியும்.

ஆதம்பாக்கம், வேளச்சேரி, உள்ளகரம், மடிப்பாக்கம் பகுதி மக்கள் பெருங்குடி தரமணிக்கு வேகமாக சென்றடைய முடியும். உள்வட்ட சாலை அமைக்கும் பணி, ஆறு ஆண்டுக்கு முன் துவங்கியது. வேளச்சேரி சுற்றுவட்டார பகுதியில் வடியும் மழைநீர், சதுப்பு நிலத்தை அடையும் வகையில், இந்த சாலையின் குறுக்கே, 200 அடி அகலத்தில், நீர்வழிப்பாதை உள்ளது.

இந்த இடம் போக, மீதமுள்ள தூரத்தில், 2016ல் சாலை மற்றும் வடிகால் அமைக்கப்பட்டது. நீர் வழி பாதையில் தரைப்பாலம் அமைத்து சாலையை இணைக்க, 2018ல், 4 கோடி ரூபாயை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கியது. பணி துவங்கிய நிலையில், நிர்வாக குளறுபடியால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும், 2019ல், 4.50 கோடியில், மற்றொரு ஒப்பந்த நிறுவனம் பணி எடுத்தது.

பணி ஆரம்பித்தபோது, பருவமழை துவங்கியதால், பணி நிறுத்தப்பட்டது. மீண்டும், 2020 ஜனவரியில் பணி துவங்கியது. இரண்டு மாதத்தில், கொரோனா பாதிப்பால், பணி நிறுத்தப்பட்டது. மீண்டும், அக்டோபரில் நீர்வழி பாதையில் மண் கொட்டி, பணி துவங்கியது.

வேளச்சேரி, தரமணி, பெருங்குடி சுற்றுவட்டார பகுதியில் வடியும் மழைநீர், இந்த நீர் வழிபாதை வழியாக, சதுப்பு நிலத்தை அடைவதால், மாநகராட்சி வழங்கிய கடிதத்தின் அடிப்படையில், தரைப்பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தீர்வு ஏற்பட்ட பின் மீண்டும் துவங்கிய பணி, கொரோனா இரண்டாம் அலையால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 2021 ஜூனில் மீண்டும் பணிகள் துவங்கின. தரைப்பாலத்திற்கான பில்லர் அமைக்கும் பணி முடிந்தது. இந்நிலையில், கன மழையால் நவம்பர் மாதம் பணி நடைபெறவில்லை. டிசம்பர் மாதம் முதல், பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேல் பகுதியில், ரெடிமேட் கான்கிரீட் தளம் போடும் பணி முடிந்து, பக்கவாட்டு சுவரில் வண்ணம் பூசும் பணி நடக்கிறது.

இனி, ரெடிமேட் கான்கிரீட் மேல் தார் சாலை போட வேண்டி உள்ளது. இந்த பணியையும், இம்மாதம் இறுதிக்குள் முடிய உள்ளது. அடுத்த மாதம், இந்த சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவர, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.