பவர்ஸ்டார் இன்று திகார் சிறையில் அடைப்பு!

0
279

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் குறைந்த வட்டிக்கு வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி டெல்லியில் உள்ள ‘புளூ ஹோஸ்டல்’ என்ற கட்டுமான நிறுவனத்தில் கைவரிசை காட்டியுள்ளார். அந்த கட்டுமான நிறுவனத்துக்கு குறைந்த வட்டியில் ரூ.500 கோடிக்கு கடன் வாங்கி தருவதாக சீனிவாசன் கூறியுள்ளார். இதனை நம்பி கட்டுமான நிறுவனம் கமி‌ஷனாக ரூ.10 கோடி கொடுத்துள்ளது. இந்த பணத்தை வாங்கிக் கொண்டு சீனிவாசன் கடன் வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.

இதுதொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். 50 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சீனிவாசன் ஆஜராகாததால் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து டெல்லி போலீசார் நேற்று சென்னை வந்து அண்ணாநகரில் உள்ள அவர் வீட்டில் வைத்து பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சீனிவாசன் பெரியமேட்டில் உள்ள எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கோர்ட்டு அனுமதியுடன் பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்படுகிறார்.