தீபாவளி ஸ்பெஷல் : சிறுவர்களை கவரும் வண்ண மயமான பட்டாசுகள்

0
232

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சிறுவர்களை கவரும் வண்ண மயமான பட்டாசுகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய வடிவங்களில் சிறுவர்கள் வெடிக்கும் வகையில் புதியரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

100 வகை பட்டாசுகள் : ஒவ்வொரு தீபாவளிக்கும் சிறுவர்களுக்கான பிரத்யேக பட்டாசுகளை அறிமுகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ள சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், இந்த ஆண்டும் சுமார் 100 வகையான பட்டாசு ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். கார்டி நாட்டி, ஜிங் ஜாங், கிராக்ளிங் டிக்ளர்ஸ் உள்ளிட்ட வெடிக்காத வகையில் கண்களை கவரும் வகையிலான பட்டாசுகள் இந்த ஆண்டு புதிய வரவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் உற்பத்தியாளர்கள்.

ஸ்பெஷல் : வழக்கமாக இரண்டு முதல் நான்கு அங்குலம் வரை தயாரிக்கப்படும் புஸ்வாண பட்டாசுகள் இந்த ஆண்டு சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு, மெகா வடிவத்தில் பல வண்ணங்களில் மழை கொட்டுவது போன்று வர்ண ஜாலங்களை காட்டும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் பாதுகாப்பான முறையில் அதிக நேரம் எரியக்கூடிய மென்டோஸ் மத்தாப்பு, நிஞ்சா மேஜிக் எனப்படும் தரைச் சக்கரம், சமூக வலைதளங்கள் பெயரிலான பட்டாசுகளும் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறுகிறார்கள் உற்பத்தியாளர்கள்.

கோல்டன் பீக்காக் எனப்படும் மயில் தோகையை விரித்து நடனமாடி சுமார் 30 நொடிகள் நிற்கும் வகையில் புதிய வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் விற்பனையாளர்கள், இசை முழங்கியபடி வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளும், வவ்வால் உள்ளிட்ட பறவைகள் போல் சப்தம் எழுப்பும் பட்டாசுகளும் அதிகளவில் விற்பனையாவதாகத் தெரிவிக்கிறார்கள்.

சிறுவர்கள் பட்டாசுகள் வெடிக்கும்போது எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும் ஏராளமான புதிய வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.