திருக்கண்ணமங்கை

0
197

திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து கொண்டாடப்பட்ட இத்திருத்தலம், சோழ நாட்டு நாற்பது திருப்பதிகளில் ஒன்றாக திருச்சேறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சீரும் சிறப்புடனும் நின்றிலங்குகிறது இங்கிருந்து திருவாரூர் 5 மைல் தூரம் தான்.

வரலாறு
திருமால் பாற்கடலைக் கடைந்த போது சந்திரன், கற்பகத் தரு, காமதேனு என்று ஒவ்வொன்றாகத் தோன்றி இறுதியில் மகாலட்சுமி தோன்றினாள். பாற்கடல் கடைந்த தோற்றத்துடன் இருந்த பெருமானின் நிலைகண்டு, மிகவும் நாண முற்ற திருமகள், அவரை நேரில் பார்த்துக்கொண்டிருக்க வெட்கப்பட்டு இத்தலத்திற்கு வந்து பாற்கடலிலிருந்து வெளியேறிய அத்தோற்றத்தையே கண்ணுள் கொண்டு எம்பெருமாளைக் குறித்து மௌன தவம் இருக்கலானாள்.

சிறப்புக்கள்
1. கிருஷ்ணாரண்யம் என்ற பகுதிக்குள்தான் இத்தலமும் அடங்குகிறது.

2. விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களால் அமையப் பெற்றதால் “ஸ்ப்த புண்ய ஷேத்ரம்” “ஸப்தாம்ருத ஷேத்ரம்” என்றும் அழைக்கப்படுகிறது.

3. இங்கு நடந்த திருமணத்தைக்கான தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்த தோடு, எப்போதும் இத்திருக் கோலத்தைக் கண்டு கொண்டே இருக்க வேண்டுமெனத் தேனிக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்துகொண்டு தினமும் கண்டு மகிழ்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியப் படத்தக்கவரலாறு.

இன்றும் தாயார் சன்னதியில் வடபுறம் உள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் ஒரு தேன்கூடு உள்ளது. எத்தனை நூற்றாண்டுகளாக இது இங்குள்ளது என்று யாராலும் சொல்ல இயலாது. இந்தக் கூட்டினைச் சுற்றி வாழும் தேனீக்கள் யாரையும் ஒன்றும் செய்வதில்லை. 108 திவ்ய தேசங்களில் இங்கு இது ஓர் அற்புதமாகும்.

4. மந்திர சித்தி இல்லாவிட்டாலும், ஒரு இரவில் இந்த ஸ்தலத்தில் வாசம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது புராண ஐதீகம்.

5. பக்தர்+ஆவி=பத்தராவி என்பது இங்குள்ள மூலவரின் திருநாமம்.
பக்தர்களின் பொருட்டு ஆவி போல் வேகமாக வந்து அருள் பாலிப்பதால் பத்தராவியென்றும், பக்தர்களை விட்டு ஒரு போதும் நீங்காது பக்தர்களின் அருகிலேயே இருப்பதால் பக்தவத்ஸலர் என்றும் இவ்வெம் பெருமானுக்குத் திருநாமம்.

6. திருமங்கையாழ்வாரால் மட்டும் 14 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.

7. நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்த நாத முனிகளுக்கு திருக்கண்ண மங்கையாண்டான் என்று ஒரு சீடர் இருந்தார் அவர் இவ்வூரில் பிறந்தவர். அவர் இப்பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இக்கோவிலின்உட்புறத்தே புல்லினைச் செதுக்கிச் சுத்தப்படுத்தி இப் பெருமானே அடைக்கலம் என்று இருந்தார். ஒரு நாள் அவர் நித்யாநுஸந்தானகோஷ்டியுடன் வேத பாராயணஞ் செய்து கொண்டு இக்கோவிலுக்குள் நுழையும் பொழுது திடீரென நாய் வடிவங்கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடிஜோதியாகி இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோணநட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாகக் கொண்டாடப் படுகிறது.

8. சிவபெருமான் நான்கு உருவமெடுத்து இத்தலத்தின் 4 திக்குகளையும்காவல் காத்து வருகிறார் என்பது ஐதீகம்.

9. இங்குள்ள அருமையான சிற்பங்களில் வைகுண்ட நாதன் சிலையும், கருடன் மேல் எழுந்தருளியுள்ள மகா விஷ்ணு சிலையும், மிக்க எழில் கொண்டு காண்போரை காந்தம் போல் கவரும் தன்மை கொண்டவை.

10. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது வானத்தை அளந்த பாதத்தை பிரம்மன் தனது கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய அதிலிருந்து தெறித்துவிழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்து அதுவே தர்சன புஷ்கரிணியாயிற்றென்று புராணங் கூறும்.

நவகிரகங்களில் ஒருவனான சந்திரன் தனது குருவின் பத்னியான தாரையுடன் காமத் தொடர்பு கொண்டு புதனைப் பெற்றெடுத்தான். இதனால் தேவர்கள் அனைவரும் சந்திரனைச் சபித்தனர். இதனால் சந்திரனின் கலைகள் குறைந்து ஒளியிழந்து தினமும் தேயலானான். தனது நிலை கண்டு மிகவும் வருந்திய சந்திரன் பிரம்மனிடம் வேண்ட, பிரம்மன் கண்ணமங்கையில் வீற்றிருக்கும் பக்த வத்சலனைச்சேவித்து அங்குள்ள தர்சன புஷ்கரிணியில் நீராடினால் இச்சாபம் தீரும் என்று சொல்ல சந்திரன் இங்குவந்து தர்சன புஷ்கரிணியைக் கண்டமாத்திரத்தில் இவனது சாபந் தீர்ந்தது.

11. இந்த தர்சன புஷ்கரிணியின் நீரினை எடுத்து பிராட்டிக்கு பட்ட மகிஷியாக பகவானால் அபிஷேகம் செய்யப்பட்டதால் இந்தப் பிராட்டிக்கு அபிஷேகவல்லி எனப்பெயர்.

12. இங்குள்ள பெருமாள் சன்னதியில் வெளிப்புறச் சுவரில் அஞ்சலிஹஸ்தராகப் புத்தர் பிரான் சிலை உள்ளது.

13. திருமங்கையாழ்வார் தமது திருமொழியிலும், திருவரங்கத் தமுதனார் இராமானுஜ நூற்றந்தாதியிலும், பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் இத்தலத்தைத் தமது பாக்களில் குறிப்பிடுகின்றனர்.

14. அந்தகக்கவி வீரராகவ முதலியார் இந்த தாயார் மேல் 100 பாக்கள் கொண்ட “கண்ணமங்க மாலை” பாடியுள்ளார்.

15. இப்பெருமாளைப் பற்றிக் காளமேகப்புலவர்பாடியுள்ளார்.

16. வடலூர் இராமலிங்க அடிகளார் இந்த தாயாரின் மீது

உலகம் புரக்கும் பெருமான்றன்
உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகையளிக்கும் பேரின்ப உருவே
எல்லாம் உடையாளே
திலகஞ் செறி வாணுதற் கரும்பே
தேனே, கனிந்த செழுங்கனியே
தெவிட்டா தன்பர் உள்ளத்துள்ளே
தித்தித்தெழுமோர் தெள்ளமுதே
மலகஞ் சகத்தேர் கருளளித்த வாழ்வே யென் கண்மணியே
கருணை தருவாயே”
என்று பாடியுள்ளார்

17. திருவரங்கத்தைப் போன்றே இத்தலத்திற்கு தெற்கே ஒரு மைல் தொலைவில் “ஓடம் போக்கி நதியும், வடக்கே ஒரு கல் தொலைவில் விருத்த காவேரி” என்னும் வெட்டாறும் ஓடி இருநதியிடைப்பட்ட ஸ்தலம் போல் ஆக்குகின்றது.

18. எங்கும் 4 கரங்களுடன் விளங்கும் விஸ்வக் சேனர் இங்கு இரண்டுகரங்களுடன் தோன்றுகிறார்.

19. கி.பி. 1608இல் அச்சுத விஜயரகுநாத நாயக்கர் என்பவரால் (திருமலைநாயக்கரின் பரம்பரையைச் சேர்ந்தவர்) இத்தலத்திற்கு மராமத்து செய்யப்பட்டு சீர்திருத்தம் நடைபெற்றது. ஏராளமான நிலதானமும் செய்யப்பட்டது.

20. இத்தலத்தின் “ஸ்தல வ்ருட்சம்” மகிழமரம் ஆகும்

21. திருக்கண்ணமங்கைக்கு திருமங்கையாழ்வார் அருளிய பதிகத்தின்கடைசிப் பாவினில் இத்தலத்திற்கு, தான் உரைத்த பத்துப் பாக்களைக் கற்றவர்கள் விண்ணவராகி மகிழ்வெய்துவர் என்று கூறுகிறார். அதாவது ஆவணிமாதம் ரோகினி நட்சத்திரத்தில் அவதரித்தான் கண்ணபிரான். அதே ரோகினி நட்சத்திரத்தில் பெருமாள், பாடம் கேட்கும்பொருட்டு பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தார். பெரிய வாச்சான் பிள்ளைக்கு பாலப் பிராயத்தில் கிருஷ்ணன் என்னும் திருநாமம் இருந்ததை உதாரணமாகக் காட்டலாம்.

அதேபோல் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த திருமங்கையாழ்வாரே அதே கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாக அவதரித்தார்… என்னே ஆச்சர்யமான விஷயம். ஆழ்வாரின் சொல்லுக்கெல்லாம் எம்பெருமான் கட்டுண்டு நிற்பதைக் காட்டும் உயர்வான வைணவ லட்சணம்.  நீ விரும்பினால் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னதற்காக திருமங்கையாழ்வாரே, நம் பிள்ளையாக வர, பெருமாளே பெரிய வாச்சான் பிள்ளையாக வந்து பாடங்கேட்டுக் கொண்டார் என்பது பெரியோர் வாக்கு.