டெபிட் / கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல், டீசல்; சேவை கட்டணம் ரத்து?

0
199

பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் போட வசூலிக்கப்படும் சேவை கட்டணத்தை தாங்களே ஏற்பதாக எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இனிமேல், கார்டு மூலம் பெட்ரோல், டீசல் போடுவதற்கு சிக்கல் இருக்காது என்றே கூறப்படுகிறது.

இதுவரை ஒவ்வொரு முறையும் கார்டை பயன்படுத்தும் போது, ‘மெர்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட் – எம்.டி.ஆர்.,’ எனப்படும் சேவை கட்டணத்தை செலுத்த வேண்டும் என வங்கிகள் கூறின. இதன்படி, கிரெடிட் கார்டுகளுக்கு, 1 சதவீதம், டெபிட் கார்டுகளுக்கு, 0.25 முதல் 1 சதவீதம் வரை சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்த கட்டணத்தை பெட்ரோல், டீசல் போடுபவர், டீலர் அல்லது எண்ணெய் நிறுவனங்கள் ஆகிய மூன்று தரப்பினரில் யார் செலுத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், பெட்ரோல் பங்க்குகளில் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் போடுவதில் சிக்கல் ஏற்பட்டது; ரொக்க பணம் தரும்படி கூறினர்.

தற்போது, இந்த சேவை கட்டணத்தை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.