சீர்காழி என்னும் காழிச்சீராம விண்ணகரம்!

0
216

திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட காழிச்சீ ராம விண்ணகரம் இன்றைய தினத்தில் சீர்காழி என்ற பெயர் தாங்கி சிறந்த நகரமாகவிளங்குகிறது (மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் மிகச் சிறந்த நகரமாய் விளங்குகிறது) சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் பேருந்துகள் இக்கோவிலின் வாயிலிலேயே செல்கின்றது. சீர்காழி புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 4 பர்லாங் தூரத்தில் உள்ளது.

இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம் உட்பட பல புராணங்களிலும் பேசப்பட்டுள்ளது. இத்தலம் இருந்த பகுதிக்கு பாடலீக வனம் என்றும், சேத்திரத்திற்கு “உத்தம ஷேத்திரம்” என்றும் உரோமசர் என்னும் மகாமுனிவர் இங்கு தவமியற்றியதாகவும், முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து எம்பெருமான் அவருக்கு திரிவிக்ரம அவதாரத்தைக் காட்டியருளியதாகவும் இத்தல வரலாறு பேசப்படுகிறது.

பிரம்மனுக்குத் தன் ஆயுளைப்பற்றிக் கர்வம் இருந்ததாகவும் அதனை அடக்க உரோமசர் என்னும் முனிவர் மகா விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் இருக்கலானார். உரோமச முனிவரின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு உன் உடம்பில் உள்ள (தலையில் உள்ள) ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின் ஆயுளில் ஒருவருடம் குறையும் என்று கூறி இன்னும் யாதுவேண்டுமென்று கேட்க எம்பெருமான் எடுத்த திரிவிக்ரம அதாரத்தை இவ்விடத்தே எனக்கு காட்டியருளவேண்டுமென்று வேண்ட அவ்வண்ணமே எம்பெருமான் தனது இடதுகாலைத்தூக்கி திரிவிக்ரம கோலத்தில் நின்றருளியதாக புராண வரலாறு இவ்விதம் வரம் பெற்ற உரோமச முனிவர் பிரம்மனைநோக்கி “உன் ஆயுளும் என் ஒருரோமும் சரி” என்று கூறி அவனது கர்வத்தை அடக்கியதாகவும் கூறுவர்.

திரி விக்ரம அவதாரம் எடுத்து, தன் தாள்களால் உலகம் அளந்தமையால் இப்பெருமாளுக்கு தாள் + ஆளன் – தாளாளன் – தாடாளன் என்பதே திருநாமமாயிற்று.

தாடாளப் பெருமானை வைத்து திரேதாயுகத்தில் கட்டப்பட்டிருந்த கோவில் இப்போதுள்ள இடத்தைவிட்டு சற்று தொலைவில் இருந்ததாகவும், அக்கோவில் வெள்ளப்பெருக்கால் சிதைபாடுற்ற பின்னே அதேபெருமாளை பிரதிட்டை செய்து இப்போதுள்ள இடத்தில் இத்தலம் எழுப்பப்பட்டதென்பர்.

மூலவர்
திரி விக்ரமன், தாடாளன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய நிலை.
தாயார்
லோக நாயகி
உற்சவர்
திரிவிக்ரமன், தாயார் மட்டவிழ்குழலி
தீர்த்தம்
சங்க தீர்த்தம், சக்ர தீர்த்தம்
விமானம்
புஷ்கலா வர்த்தம்
காட்சி கண்டவர்கள்
உரோமசர், அஷ்டகோண மஹரிஷி

சிறப்புக்கள்

1. மஹாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்த இடத்தில் தானும் யாகம் செய்யவிரும்பி விசுவாமித்திரன் ஒரு இடத்தை தெரிவு செய்ததாகவும், யாகம் முடியும் வரை இடையூறுகளைக் களைய இராம இலக்குவர்களைத் துணைக்கழைத்ததாகவும் வால்மீகி கூறுவார். அவ்விடத்திற்கு சித்தாஸ்ரமம் என்றுபெயர். அந்த சித்தாஸ்ரமம் என்பது இவ்விடம்தான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். இவர்களின் ஆதாரத்திற்குத் துணை நிற்பது சித்தாஸ்ரமம் பாடலிகவனத்தில் அமைந்திருந்தது என்பதேயாகும். இருப்பினும்இது ஆய்வுக்குரிய விஷய மேயன்றி முடிவான உண்மையாக ஏற்றுக்கொள்ளுமாறில்லை.

2. 108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை திருமங்கை ஆழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம் என்றால் விண்ணில்உள்ள பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம் என்பது பொருள். அந்த விண்நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.
1. பரமேச்சுர விண்ணகரம்
2. காழிச்சீ ராம விண்ணகரம்
3. அரிமேய விண்ணகரம்
4. வைகுந்த விண்ணகரம்
5. நந்திபுர விண்ணகரம்
ஆனால் விண்ணகர் என்னும் சொல்லை நம்மாழ்வார்தான் முதன் முதலாகக் கையாண்டுள்ளார். உப்பிலியப்பன் கோவிலை திருவிண்ணகர் என்றே நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆண்டாளும் நாச்சியார் திருமொழியில் மேகவிடு தூது பாசுரத்தில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.

எம்பெருமானின்கைங்கர்யத்திற்காக பொருளைக் கொள்ளையடிக்க முயன்ற திருமங்கையாழ்வார், பெருமாளை மங்களாசாசனம் செய்வதற்காக இச்சொல்லையும் “இலக்கிய கொள்ளை” கொண்டுவிட்டார்.

3. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம், மணவாள மாமுனிகளும் இரண்டுமுறை இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார்.

4. ஒரு சமயம் இத்தலம் அழிவுற்ற போது உற்சவப் பெருமாளை மட்டும் ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து தினமும் திருவாராதனம்முடித்து மீண்டும் தவிட்டுப் பானைக்குள்ளேயே வைத்துக் காத்துவந்தாள். திருமங்கை யாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில் வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு கூற அவ்விதமே திருமங்கையிடம் கொடுக்க அவர் இங்கே பிரதிஷ்ளடை செய்தார் என்பர். எனவே எம்பெருமானுக்கு “தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற பெயரும் உண்டு.

திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வரும்போது ஞானசம்பந்தர் வாதுக்கழைத்ததாகவும், அப்போது தான் சுயமாக கவிபாட ஆராதன விக்ரக வேண்டுமென்று திருமங்கையாழ்வார் தெரிவிக்க அவரது சீடர்கள் மூதாட்டியிடம் தாடாள விக்ரகப் பெருமாள் இருப்பதை அறிந்து அதனைப் பெற்று வந்து கொடுத்ததாகவும் கூறுவர்.

5. ஆற்காடு நவாபின் ஆட்கள் இவ்வூருக்குத் தண்டலுக்கு (வரி வசூலுக்கு) வரும்போது தாடாளப் பெருமாளைத் தூக்கிச் சென்று நவாபின்மகளிடம் கொடுக்க அவளும் படுக்கையறையிலும், உப்பரிகையிலும் வைத்துவிளையாட, சீர்காழியில் உள்ள சிதம்பர படையாச்சி கனவிலும், அர்ச்சகரின்கனவிலும் வந்து தாம் இருக்குமிடத்தை தெரிவிக்க, நாங்கள் வந்து எப்படிஉம்மைக் கொணர்வது என்று கேட்க காவல்கட்டுகளை கடந்து மதிற்சுவர்அருகே வந்து வெண்ணெய் உண்ட தாடாளா வா, தவிட்டுப்பானைத் தாடாளா வா என்று அழைக்க நான் வந்துவிடுவேன் என்று கூறினார்.

அவ்விதமே அவ்விருவரும் வரும்போது காவலர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க மதிற்சுவரை அடைந்து.

தாடாளா வா தாடாளா வா
வெண்ணெய் உண்ட தாடாளா வா
தாடாளா வா தாடாளா வா
தவிட்டுப் பானைத் தாடாளா வா

என்று கூற உப்பரிகையில் நவாபின் மகள் அப்பெருமானைத் தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருக்க சரே லென்று சாளரத்தின் வழியாகப் பாய்ந்து இவர்களின் கரத்தில் சேர, ஓட்டமும் நடையுமாகக் கொண்டுவந்து அப்பெருமானை ஊர் சேர்த்ததாகக் கூறுவர்.

இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் சிதம்பரப் படையாச்சியின் வம்சத்தாருக்கு இக்கோவிலில் தனி மரியாதைகள் உண்டு.

6) திருமாலின் காலடிக்கீழ் உலகடங்கியது போல் சோம்பலற்ற மன்னனின் கீழ் உலகு தங்கும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. உலகளக்கத் திருமால் கொண்ட அவதாரம் த்ரிவிக்ரம அவதாரமாகும். இத்தலத்து எம்பெருமானின் திருநாமமும் திருவிக்ரமனாகும்.

7) திருஞான சம்பந்தரும், திருமங்கை யாழ்வாரும் சமகாலத்தவர்கள்என்பது வரலாறிந்தார் கூற்று. மதத்தால் இருவரும் வேறு பட்டவராயினும் மனத்தால் “கற்றானைக் கற்றோனே காமுறுவான்” என்பதற்கொப்ப ஒருவரையொருவர் சந்திக்கப் பேராவல் பூண்டவராயிருந்தனர் என்பதும் ஒருவருடன் ஒருவர் கன்னித்தமிழில் கலந்துரையாடக் காலங்கருதிக் காத்து இருந்தனர் என்பதும் தெரிகிறது.