ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்னும் திருக்கூடலூர்

0
261

திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய தேசம் தஞ்சைமாவட்டத்தில் உள்ளது. கூடலூர் என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வரக்கூடியது மதுரையேயாகும். ஆனால் இந்தக்கூடலூர் அதுவன்று. சங்கமஷேத்ரம் என்று அழைக்கப்படும் இத்திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர். அதேபோல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ள ஆடுதுறை என்னும் நகரமன்று. ஏற்கனவே சொன்னது போல் திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள ஒரு சிறியகிராமம். இந்த எளிய கிராமத்தின் பெயர் ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றேவழங்கப்படுகிறது.

வரலாறு
இத்தலத்தைப்பற்றி பிரம்மாண்ட புராணம், பாத்ம புராணம், வடமொழியில் உள்ள கூடற்புராணம் போன்றவைகள் செய்திகளை வாரி வழங்குகிறது.

திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம்தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கையின் மேற்படி பாடலும் சான்று காட்டும். திருமால் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத்தாங்கி காட்சி தந்தார் என்பர். மஹாலெட்சுமியைக் காக்கும் பொருட்டு வராஹ அவதாரமெடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் தேவியை அணைத்துக் காட்சிகொடுத்ததாலும் முதலில் இவ்விடத்தில் பூமியைக் கீறி உள்புகுந்ததால் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தைமட்டும் பாடி ஸ்ரீமுஷ்ணத்தைப் பாடாது விட்டாரென்றும் ஆன்மீக ஆய்வாளர் கூறுவர்.

ஒரு சமயம் அம்பரிஷன் என்னும் ஒரு மன்னன் மிகச்சிறந்த திருமால் பக்தனாகி மன்னர் பதவியை துறந்து மகரிஷி ஆனான். கடும் தவம் புரிவதிலும், கடுமையான விரதங்களைக் கடைப் பிடிப்பதிலும் அம்பரிஷன் தேவர்களிலும் சிறந்தவனாக விளங்கினான். அம்பரிஷியன் தவநிலையைச் சோதிக்க துருவாச முனிவர் அம்பரிஷியின் குடிலுக்கு வந்து அவரது ஏகாதசி விரதத்தின் பலனைக் கொடுக்குமாறு கேட்டார். துருவாசர் வந்திருப்பதையும் பொருட்படுத்தாது தனது விரதத்திலேயே அம்பரிஷி மூழ்கியிருந்தார். ஏகாதசி முடிந்து துவாதசிவந்துவிட்டது. அப்போதும் ஸ்ரீமந் நாராயணன் நினைவாக தவத்தில்ஆழ்ந்துவிட்டார் அம்பரிஷி.

தன்னைச் சற்றும் மதிக்காத நிலையைக் கண்ட கோபகுணம் கொண்டதுர்வாசர் அம்பரிஷிக்கு சாபம் கொடுக்க, அம்பரிஷி மகாவிஷ்ணுவை துதித்தார். மஹா விஷ்ணு துர்வாசர் மீது தனது சக்ராயுதத்தை ஏவினார். சக்ராயுதத்தை எதிர்த்து நிற்க முடியாத துர்வாசர் சக்ராயுதத்தை சரண் அடைந்து எம்பெருமானின் அடியார்களுக்கு அபச்சாரம் விளைவித்த தனதுகுணத்தை நொந்து தன்னைக் காப்பாற்றுமாறு மஹாவிஷ்ணுவை வேண்ட சக்ராயுதத்தை திருப்பிப் பெற்ற மஹாவிஷ்ணு துர்வாசரை மன்னித்தது இத்தலத்தில்தான்.

பிறகு திருமாலின் வேண்டுகோளின்படி பொன்னியாற்றின் கரையில் திருக்கோயில் எழுப்பி நீண்டநாள் வழிபட்டு பரகதியடைந்தான். அம்பரிஷனுக்கு அருளியதால் அம்பரிஷ வரதரென்றும் வையங்காத்த பெருமானென்றும் இங்கு பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது. இந்த அம்பரிஷனால் கட்டப்பட்ட கோயில் இப்போது இல்லை.

ஒரு சமயம் பொன்னியில் வெள்ளப்பெருக்கு உண்டாகி அதன் கரையிலிருந்த (காவேரிப் பிரளயம் என்றும் இதனைக் கூறுவர்) இக்கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து மண்மேடாகிவிட்டது. மூலவரும் உற்சவரும்தாயாரும், இதர விக்ரஹங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. கோபுரத்தையும்,மதில்களையும், இதர விக்ரஹங்களையும் வெள்ளம் இடித்துச் சென்றாலும் மூலவர், உற்சவர், தாயார் மட்டும்பொன்னியின் போக்கில் சென்று ஒருபுறம் ஒதுங்கி நிற்க, மீன் வேட்டைக்குச்சென்று வந்த பரதவர் வலையில் சிக்கி அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் சேரியில் அமர்ந்தனர்.

வெள்ளம் வடிந்து வானம் வெறிச்சோடிய சில தினங்களில் மதுரையில்நிலாமுற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் கனவில்மஹாவிஷ்ணு தோன்றி ஆற்றங்கரையில் ஒதுங்கிச் சேரியில் இருக்கும் தமக்குகோவில் கட்டுமாறு கேட்டுக்கொள்ள தனது தளபதி கிருஷ்ணராஜுநாயக்கருடன் படை பரிவாரத்துடன் தஞ்சைத் தரணி நோக்கிப் புறப்பட்டுஅழிந்த கோவிலைப் பார்வையுறுங்கால், சேரித் தலைவன் மீனவன் ராமன் என்பான் ஓடிவந்து இறைவன் தமது சேரியிலிருப்பதை தெரிவிக்க, ராஜ மரியாதையுடன் வழிபாடியற்றி அவைகளைப் பெற்றுக் கொள்ள எவ்விடத்தில்கோவில் கட்டுவதென்ற ஐயம் எழ, சேரிக்கருகாமையில் பேரொளி தோன்றி அது ஓரிடத்தில் நிலைத்து நின்று மறைய இறைவனும் குறிப்பால்உணர்த்தினான் என்றே நினைத்து அவ்வொளி தோன்றிய இடத்தில் (ஆடுதுறை கிராமத்தில்) ராணி மங்கம்மாவினால் இப்போதுள்ள கோவில் கட்டப்பட்டது.

மூலவர்
வையங்காத்த பெருமாள் (ஜெகத்ரட்சகன்) உய்யவந்தார் என்னும் திருநாமம் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார்
பத்மாசனி, புஷ்பவல்லி.
உற்சவர்
மூலவருக்கு உள்ள பெயர்களே
தீர்த்தம்
சக்கர தீர்த்தம், இந்திர தீர்த்தம், காவேரி நதி
விமானம்
சுத்தஸ்தவ விமானம்
காட்சி கண்டவர்கள்
அம்பரிஷி, நந்தக முனிவர், காவேரி

சிறப்புக்கள்

1. மும்மூர்த்திகளில் திருமாலை, காலால் உதைத்த பிருகு முனிவர் மஹாவிஷ்ணுவே பொறுமையின் சிகரம் என்பதை உணர்ந்து தாம் செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடும் முகத்தான் மஹாலெட்சுமியே தனக்கு மகளாக வரவேண்டுமென்றும், அவரை வளர்த்து தம் பாவம் போக்கி மீண்டும் திருமாலுக்கு அளிக்கவேண்டும் என்று இத்தலத்தில் தவமிருந்து அது நிறைவேறியதாக ஐதீகம். எனினும் இது ஆய்வுக்குரிய விஷயம் (இதே கதைதான் கும்பகோணத்திலும்)

2. நந்தக முனிவரோடு தேவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வழிபட்டமையால் இதற்கு கூடலூர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.

3. சஷயம் (காசம்) என்னும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட சந்திரன் (நவக்கிரகங்களின் ஒருவன்) இத்தலத்தில் பெருமாளைநோக்கித் தவமிருந்து நோய் நீங்கப் பெற்றான் என்பதும் புராண வரலாறு.

4. ஒரு சமயம் புண்ணிய நதிகள் எல்லாம் தம்மில் பலரும் நீராடி பாவக்கறை மிகுந்து போயிருப்பதைப் போக்கும் பொருட்டு பிரம்மலோகத்திற்குச் சென்று பிரம்மனிடம் முறையிடும்போது காவேரியின் அலங்கோல நிலையைக் கண்டு அனைவரும் எள்ளி நகையாட பிரம்மனால்ஆற்றுப்படுத்தப்பட்டு தனது அவலத்தை இப்பெருமானிடம் தவமிருந்து காவிரிபோக்கிக் கொண்டாள் என்பது ஐதீகம்.

5. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். வராஹ அவதாரம் எடுத்தப் பெருமாள் இங்கு புகுந்ததை குறிக்கும் முகத்தாண், தமது பாக்களில் புகுந்தானூர், புகுந்தானூர் என்றே அவ்வவதாரத்தை மறைமுகமாக குறிக்கிறார். மேலே எடுத்தாண்டுள்ள பாடலில் வராஹ அவதாரத்தை இத்தலத்தோடு வெளிப்படையாகவே உணர்த்துகிறார்.

6. அம்பரிஷன் ரதம் என்று பெயர் பெற்ற பிரம்மாண்டமான ரதம் ஒன்று இங்கு இருந்ததாகவும், ராணி மங்கம்மாவால் அந்த ரதம் புதுப்பிக்கப்பட்டு நெடுங்காலம் புழக்கத்தில் இருந்ததாகவும், சமீப காலமாக சுமார் (60 வருடங்களாகத் தான்) இந்த ரதம் அழிந்து பட்டதெனவும் கூறுவர்.

7. ஏற்கனவே பொன்னியின் கரையிலிருந்து அழிந்துபட்ட திருக்கோயில்இன்றைய ஆடுதுறைப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீதொலைவில் மண் மேடிட்டு உள்ளது. இப்பகுதியை “பெருமாள் பொட்டல்” என்றே இப்பகுதி மக்கள் இன்றும் அழைக்கின்றனர்.

8. ராணி மங்கம்மாளுக்கு இக்கோவிலில் சிலையெடுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மதில் சுவர் மிக நீண்டு அதிக உயரமானதாக, காண்போரைபிரமிக்கச் செய்யும் வகையில் இன்றும் நின்று நிலவுகிறது. இக்கோவிலின் உட்புற மதில்சுவரில் இருக்கும் கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

9. ஆஞ்சநேயர் ஒரு சமயம் விண்வெளியில் சென்று கொண்டிருக்கும்போது இக்கோவிலில் இருந்த ஜனத் திரளைக் கண்டு வியந்து, இது என்னவென்று பார்க்க வந்தவர், தனது தெய்வம் ஸ்ரீராமருக்கே மக்கள் இங்கு வழிபாடு எடுக்கிறார்கள் என்று தாமும் அவர்களோடு கலந்து ஆனந்தக்கூத்தாடி மூர்ச்சித்துக் கிடக்க, ஒளிமயமாக பெருமாள் ஆஞ்சநேயருக்கு காட்சி கொடுத்தாராம். இதன் நினைவாகவே இக்கோவிலின் முன் கூத்தாடும் பாவனையில் ஆஞ்ச நேயருக்கு இன்றும் ஒரு சிறிய கோவில் உள்ளது.

10. இந்தக் கூடலூர் சோலையில் ஒரு தென்னை மரத்தில் வாழ்ந்து வந்த கிளியொன்று தினமும் ஒரு நாவல் பழத்தைக்கொண்டு வந்து பெருமானுக்குச் சமர்ப்பித்து விட்டு ஹரி, ஹரி என்றும் கூவும் பழக்கம் கொண்டிருந்தது. ஒரு நாள் அவ்விதமே நாவல் பழத்துடன் ஹரியின் பூசைக்கு வந்துகொண்டிருக்கும்போது வேடன் ஒருவனால் எய்யப் பட்ட அம்பால் கழுத்தறுபட்டுத் தரையில் வீழ்ந்து துடிக்க, அதை எடுக்க வந்த வேடன் அக்கிளியைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பதைக் கண்டு பயந்து ஓடிப்போக, தன் உயிர் பிரியும் தருவாயில் கூட அக்கிளி ஹரி,ஹரி என்றே முனக, இறுதியில் அக்கிளிக்கு திருமால் காட்சி கொடுத்து நீ முன்பிறவியில் வித்யா கர்வத்துடன் அனைவரையும் இகழ்ந்து பேசவே இப்பிறவியில் எனது பெயரை மட்டும் சொல்லிக்கொண்டே திரியும் கிளியாகஆனாய். வேடனின் அம்பு பட்டதும் நினது பூர்வ ஜென்ம பாபம் தொலைந்தது என்றதும் ஜோதிமயமான மானிட உருப்பெற்று இறைவனுடன் அக்கிளி கலந்த காட்சியை எண்ணற்ற மக்கள் கண்டு ஹரி, ஹரி, ஹரி என்றுவிண்ணைப் பிளக்க கோஷமிட்டனர் என்று புராணங் கூறும்.